Total Pageviews

Monday, February 28, 2011

பாசம் !!

 தந்தை பாசம்
கல்வியும் கடனும் முடியும்வரை !

தமயனின் பாசம்
சொத்தில் பங்கு கிடைக்கும்வரை !

நண்பனின் பாசம்
நன்றி மறக்கும் வரை !

மனைவியின் பாசம்
குழந்தை பிறக்கும்வரை !

குழந்தையின் பாசம்
அது வளரும்வரை !

தாயின் பாசம்
உன் தலை சாயும் வரை !

Saturday, February 26, 2011

தனிமையில் ஏங்கும் மனம் !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு
மீண்டும் மீண்டும் அதே ஏமாற்றம் !
ஆசைகள் பல அறிவுரைகள் பல
ஆனாலும் குறையவில்லை ஏக்கம் !
கடந்து வந்த தூரம் தெரியவில்லை
சென்று சேரும் நேரம் தெரியவில்லை !
சிரித்திருந்த காலங்கள் போயின
சிந்தனையில்  காலங்கள் கழிந்தன !
பசியும் இல்லை தூக்கமும் இல்லை
கவலையும் கண்ணீரும் இங்கே !
கண்ணெதிரே யார் யாரோ
கனவினிலே யார் யாரோ !
ஊட்டி வளர்த்த தாய் எங்கே
தூக்கி வளர்த்த தந்தை எங்கே !
யாருக்காக வந்தேன் இங்கே
யாரை எண்ணி நின்றேன் இங்கே !
அண்ணன் தம்பி அருகில் இல்லை
ஆறுதல் கூறும் ஆளும் இல்லை !
அருள் தர இங்கு தெய்வமில்லை
அணைத்துக்கொள்ள அன்புமில்லை !
வாழ்த்த வந்தவர் தூற்றிபோக
வாழ வந்தவன் ஓடி போனான் !
தனிமையில் ஏங்கும் மனம்
தவிக்கிறது இங்கே தினம் !

Friday, February 25, 2011

முடிவில்லாதது !!!!!!!!!!!!!!

எனக்கு தெரியும் நீ என் நண்பன் !
உன் நினைவுகள் என் மனதில் 
உலாவருவது போலவே  என்
நினைவுகளும் உன் மனதில்
எப்போதாவது வலம் வருமா ?
இந்த நீண்ட வழிபாதையில்
உன்னுடன் கை கோர்த்து
நான் நடக்கையில் நம்
இருவரின்  எண்ணங்களும்
ஒன்றாக வேண்டும் !
உனக்கென நானும்
எனக்கென நீயும் வாழும்
இந்த வாழ்க்கை ஒரு
 நாளும் அதன் போக்கில்
மாறி பயணிக்ககூடாது !
தனி தனியே சென்றால்
எதோ ஒன்றை மட்டுமே
அடைய முடியும் ஆனால்
நம் இருவரின் முயற்சியால்
இந்த உலகத்தையும் ஆள்வோம் !
என் தவறுகளை சுட்டி காட்டும்
உரிமை உனக்கு மட்டுமே உண்டு
என் பாதையை அடைய நீ
மட்டுமே வழி காட்டுவாய் !
இந்த நட்பை கூற வார்த்தை
இல்லை , ஆனால் நம்
நட்புக்கு ஈடு இணை ஏதும்
இந்த உலகில் இல்லை !
உன்னை பிரிந்து விட்டதாக
ஒருபோதும்   நினைத்ததில்லை
ஏனென்றால் நீ இருப்பது
என்னுள் நானாய் !
நம் நட்புக்கு இலக்கணமும்
இல்லை இறுதி நாளும் இல்லை
உலகம்  முடியும்வரை இங்கே
வாழும் இந்த நட்பு !

வாழும் நட்பு

குழந்தை பருவத்தில்
கட்டி புரண்ட நட்பு
பள்ளி பருவத்தில்
கூடி  ஆட நட்பு
வாலிப பருவத்தில்
ஊர் சுற்ற நட்பு
வயதானதும் பேசி
ரசிக்க நட்பு
கவலையின் போது
தோள் சாய நட்பு
ஆனந்தத்தில் சேர்ந்து
மகிழ நட்பு
பிரிந்த போதும்
நினைத்து வாழும் நட்பு

Thursday, February 24, 2011

என்ன நிலை ?

அன்பே ஆருயிரே என்று
அழைத்ததில்லை !

ஆனந்தமாய்  கட்டி
அணைத்ததில்லை !

ஆனாலும் இது காதல்
இருந்தும்  இங்கே மோதல் !

அருகருகே இருந்தும் 
அரவமில்லை அங்கே !

முத்தம் கொடுத்தாய்
உச்சி முகர்ந்தாய் !

அன்பை   கொடுத்தாய்
அதையே வேண்டினாய் !

சொந்தமும் இல்லை
சுற்றமும் இல்லை !

தேடி வந்தாய் நீ
ஓடி வந்தேன் நான் ! 

 வெப்பமும் இல்லை
வெயிலும் இல்லை !

குளிரும் இல்லை
மழையும் இல்லை !

 உருக்கினாய் என்னை 
உறைந்துபோனேன் நான்  !





மாயக்காரன் !

ஆனந்தமாய் ஓடி
வந்தேன் உன்னை காண
அருகில் இருந்தும் எங்கோ
தொலைவில் இருந்தேன்

கற்பனையில் உன் முகம்
பார்த்த நான் நேரில்
உன் முகம் பார்க்க
முடியாமல் தவித்தேன்

என் விரல் கோர்த்து முகம்
பார்த்து நீ சிரிக்கையில்
உலகமே மறந்து போனது
இடமே இருண்டு போனது

காதலும் இல்லை காமமும் இல்லை
காற்றினிலே நீ பேசினாய்
கண்முன்னே அமர்ந்தாய்
கள்வனை போல இருந்தாய்

இந்த மனவசியத்தை நீ
எங்கிருந்து கற்றாய் ?
ஐம்புலன்களையும் அரை
பொழுதில் அடக்கினாயே
உன் மந்திர சக்தியால்
கட்டுண்டு மதி
மயங்கியவர் எத்தனைபேர் ?
மாயக்காரனே பதில் கூறு

அன்பால் வலை விரிக்கும்
தந்திரத்தை எங்கிருந்து கற்றாய்
ஆறுதலாய் நீ பேசும்
பேச்சு எந்த மொழி

உன் அன்பை வேண்டி ஓடிய
நாட்கள் போயின  உன் அன்பை
காக்க ஒளிந்து கொள்ள
ஒரு இடம் தேவை இங்கே !



Wednesday, February 23, 2011

நீயே சொல்............ !!!!!!!!!!!!!!!!!

உன் வரவு எனக்கு புதியதுதான்
இருந்தாலும் என்னுள் நீ !

மலருக்குள் மணம்போல
எனக்குள் வந்தாய் நீ !

பழைய பொருள்களை போல
பெரும் பொக்கிஷமாய் நீ !

தூக்கி ஏறிய மனமில்லை
துடிக்கும் இதயமானாய் நீ !

ஒற்றையடி பாதையாய் அல்ல
காலடி தடமாய் நீ !

உடைந்த கண்ணாடியாய் அல்ல
ஒளிரும் ஓவியமாய் நீ !

புயலாய் வந்த புதியவனே
நீயே சொல் என்னுள் யார் நீ ?

பிரிவு !

 சூரியனும் மறைந்து போனான்
நீ சென்று விட்ட சோகத்தில் !

மரங்களும் வாடி போயின
உன் காற்று நின்றவுடன் !

மணம் தரும் மல்லிகையும்
வாடி போனது நீ சூடாததால் !

இப்படி எல்லாம் உன்னை
பிரிந்த சோகத்தில் இருக்க

நான் மட்டும் எப்படி ஆனந்தமாய்
இருப்பேன் உன் பிரிவில்  ?

கோபம் !

வானுக்கு கோபம் வந்தால்
மழையாய் கொட்டுகிறது !
மேகத்துக்கு  கோபம் வந்தால்
இடியாய் முழங்குகிறது !
கடலுக்கு கோபம் வந்தால்
பேரலையாய் எழுகிறது !
காற்றுக்கு கோபம் வந்தால்
புயலாய் வீசுகிறது !
வெயிலுக்கு கோபம் வந்தால்
தணலாய் தகிக்கிறது !
நிலவுக்கு கோபம் வந்தால்
ஒரு நாள் ஒளிந்துகொள்கிறது !
உனக்கு கோபம் வந்தால்
உன் மௌனம் கொல்கிறது !
என்னை கொல் இல்லையேல்
உன் மௌனத்தை கொல் !

Tuesday, February 22, 2011

மழை !

சோவென்று மழை
அங்கே குடை பிடித்து
அசைந்து செல்லும் பலர் !

தன் முந்தானையை 
குழந்தையின் தலையில் போட்டு
ஓடுகிறாள் ஏழை தாய் !

இன்னும் வேகமாக தன்
கீற்றுகளை செலுத்தும் மழை
இன்னும் வேகமாக தாயின் ஓட்டம் !

மழை நினைத்தது அந்த தாய்
மழையில் ஆனந்தமாய்
ஓடுகிறாள் என்று

தாயின் மனதில் குழந்தை
நனையாமல் இருக்கவேண்டும்
வேண்டுமே என்ற வேகம்

இதில் யாரை குற்றம் சொல்வது ?
ஆனந்தமாய் கொட்டும் மழையையா
இல்லை அங்கே அயர்ந்து ஓடும்
அந்த ஏழை தாயையா ?

Monday, February 21, 2011

ஒற்றை வார்த்தை !

ஊரெல்லாம் உறங்க
விழித்திருந்தேன் வீணிலே !
வேலையும் இல்லை
வேண்டுதலும் இல்லை !
உறங்கு என்ற உன்
ஒற்றை வார்த்தைக்காக
விழித்திருந்தேன் விடியும் வரை !
விடிந்ததும் வினவினாயா?
இல்லை விளக்கம் தான் தந்தாய்!
உன் பார்வைக்கு எட்டும்
தூரத்தில் நான் இல்லை
உன் மனதிற்குமா இது தூரம் ?
நேரில் பார்க்கையில் என்
பார்வையை உன் பார்வையால்
தடை செய்கிறாய்  !
நீ திரும்பி நடக்கையில்
என் பார்வை உன்னை
பின் தொடர்வதை
எப்படி தடுப்பாய் ?
உன் நிழலிலும் என் நிழல்
ஒளிந்திருக்கும்
விரட்ட நினைக்காதே வீணே !
காலம் ஒரு நாள் கேள்வி கேட்கும்
அது வரை காத்திரு !
கனவில் மட்டும் என்னுடன்
கை கோர்த்திரு !

Friday, February 18, 2011

நீயும் நானும்......

 உன்னை நினைத்து நான்
வாழும் தருணங்கள்
உன் நினைவில் கரையும்
ஒவ்வொரு பொழுதுகள்
உன்னிடம் நேரில் பேசியதை
விட தனிமையில் உன்னுடன்
நான் பேசியதே அதிகம்
நீ என்னிடம் விட்டு சென்றது
உன் நினைவுகளை
மட்டுமல்ல , உன் அன்பு வேண்டி
இந்த உலகில் பல பேர் இருக்கலாம்
சிலருக்கு கிடைக்கலாம்
ஆனால் அதை முழுதும்
அனுபவிக்க வேண்டும் என்று
தன்னலம் கொண்டவள் நானாக
மட்டுமே இருக்க முடியும்
உன் பாசத்தில் கரைந்து
உன் பரிவில் உருகி இன்று
நான் நானாக இல்லை
உன்னுடம் அமர்ந்திருந்த அந்த
ஆனந்த தருணங்களை
ஒவ்வொரு முறையும்
எண்ணி பார்க்கிறேன்
என்றாவது ஒரு நாள் நீயும்
நானும் அங்கே அதே
சந்தோஷ நிமிடங்களை மீண்டும்
பெறுவோம் என்று நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் தனிமையில் .................

Thursday, February 17, 2011

வரம் வேண்டும் !!!!!!!!!!!!

உன் இமையில் ஒரு ஓரம்
அமர வரம் வேண்டும்
உன் இதய துடிப்பில் 
ஒரு முறை நான்
துடிக்க வரம் வேண்டும்
விழி மூடி நீ இருக்கையில்
அதன் உள்ளே ஒளிந்துகொள்ள
ஒரு வரம் வேண்டும்
உன் தலை முடியின் நிறமாய் நான்
மாற ஒரு வரம் வேண்டும்
ஒவ்வொரு முறை நீ
சுவாசிக்கும் போதும்
உன் இதயத்திற்குள்
சென்று வர வரம் வேண்டும்
உன் விரல்களில் என் முகம்
பதிக்க ஒரு வரம் வேண்டும்
ஒரு முறையேனும் உன்னை
துயில வைக்கும் வரம் வேண்டும்
வெளியில் நீ நடக்கும் போது
உன் நிழலில் நான் வாழ
ஒரு வரம் வேண்டும்
நீ புன்னகை செய்யும்போது
உன் இதழில் முத்தமிட
ஒரு வரம் வேண்டும்
உன் வார்த்தையின் மொழியாய்
நான் மாற ஒரு வரம் வேண்டும்
உன் தோள் மீது ஒரே ஒரு
முறை துஞ்ச வரம் வேண்டும்

நான் !

இனி நாம் சந்திக்க வேண்டாம் என்று
கூறிவிட்டு , எப்போது சந்திப்போம்
என்று ஏங்குவேன் நான் !

இனி உன்னிடம் பேசமாட்டேன் என்று
கூறிவிட்டு மீண்டும் பேசமாட்டோமா
என்று ஏங்குவேன் நான் !

இனி உன்னை தேட மாட்டேன் என்று
கூறிவிட்டு தெருவில் நடப்பவர்களில்
உன் முகம் தெரிகிறதா என்று
தேடுவேன் நான் !

 நான் நான் இல்லை
 நீயாக   நான் !

இதயம் வேண்டும்

எனக்காக ஒரு இதயம் வேண்டும் !
என் உறக்கத்திலும் என்னை
புரிந்து கொள்ள இதயம் வேண்டும் !
என் வார்த்தைகளை மட்டும் இல்லாமால்
என் மௌனங்களையும் புரிந்து
கொள்ளும் இதயம் வேண்டும் !
 என் விழி நீரை துடைக்க
கரம் கொடுக்க வரவில்லை
என்றாலும் , அந்த துயரம்
உணரும் இதயம் வேண்டும் !
நான் நினைக்கும் நேரத்தில்
என்னை நினைக்கும்
இதயம் வேண்டும் !
என்னை காதலிக்க வில்லை
என்றாலும் என் இதயத்தை
காதலிக்கும் இதயம் வேண்டும் !

Tuesday, February 8, 2011

ஓட்டம்.................

புயல் மழை ஓடி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்கள்
நான் மட்டும் இங்கே
மழையில் நனைந்து
புயலில் கை விரித்து
இங்கும் அங்கும் ஓடுகிறேன் .....
காரணம் பயம் இல்லை
ஆசையும் இல்லை
புயல் காற்றில் உன் சுவாசக்காற்று
கலந்திருப்பதால் கிடைத்தவரை
சுவாசித்து கொள்ளவே ஓடுகிறேன்
ஊராருக்கு எப்படி புரியும் இது ?
இறப்பதற்கு பயமில்லை
உன் மூச்சு காற்று
என்னுள் இருக்கும் வரை
எனக்கு இறப்பு இல்லை
இன்னும் ஓடுவேன்
பூலோக எல்லை வரை ......
என் காலில் வலிமை
இல்லை என்றாலும்
என் காதலுக்கு வலிமை உண்டு .....

கண்ணீர் .............

ஊரே உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறது,
ஆனால்.........
என் கண்களில் மட்டும் கண்ணீர் ...
ஆனந்த கண்ணீர் .......

Monday, February 7, 2011

இன்று நான் மட்டும் ....

பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்
திடீரென்று ஏதோ ஒரு உணர்வு
அது என்ன சந்தோஷமா
இல்லை ஏதோ  ஒரு உணர்வு
அட ! இந்த இடம் ம்...
இப்போது நினைவுக்கு வருகிறது
இதே இடத்தில் பல
நாள் நாம் இருவரும்......
அந்த நாளின் நினைவுகள்
இன்றும் என் மனதில் அழியாமல்
நீ மறந்திருப்பாயா இதை ?
நிச்சயம் இருக்காது
அந்த நாட்களை மறக்கவே முடியாதே
வெயில் மழை என்று
எதையும் அறியாமல் கை கோர்த்து
நடந்த நாட்களாயிற்றே
என் தோளோடு நீ சாய்ந்து
நடக்கையில் ஊரார் கண்படுமே
என்று அஞ்சியும் வெட்கியும்
ஓடிய நாட்கள் அல்லவா அது ...
இன்று நான், நான் மட்டும்
உன் நினைவுகளுடன் இங்கே ....

உன் வாழ்த்து

எதையெதையோ எண்ணி
குழம்பி கொண்டிருந்தேன் ,
தெருவில் நடப்பவர்கள் எல்லோரும்
என்னை பார்த்து விட்டு செல்லுவது
போன்று உணர்ந்தேன் ,
ஒன்றும் விளங்கவில்லை எங்கோ
நீ என்னை நினைத்துகொண்டு
இல்லை இல்லை என்னுடன் நீ
பேசிக்கொண்டு இருக்கிறாய்
ஆம் என்னால் உணர முடிகிறது
என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய்
அமைதியாக இமைகளை மூடினேன்
என்னுள் நீ வந்தாய் பேசினாய்
என்னை வாழ்த்தினாய்
 ! இன்று என் பிறந்தநாள்

கொடுத்துவிடு

கடிந்துகொள்ளும் போது கூட
கருணை கொண்ட பார்வையா
கோபத்தையும் சிரிப்பில் வெளிப்படுத்த  
உன்னால் மட்டுமே இயலும்
கொடுக்க நினைத்தும்
தவிக்கிறாய்
மறுக்க முடியாமல் ஓடி 
ஒளிகிறாய்  
ஏன் இந்த போராட்டம் ?
கொடுத்துவிடு இல்லை
மறுத்துவிடு