Total Pageviews

Monday, February 28, 2011

பாசம் !!

 தந்தை பாசம்
கல்வியும் கடனும் முடியும்வரை !

தமயனின் பாசம்
சொத்தில் பங்கு கிடைக்கும்வரை !

நண்பனின் பாசம்
நன்றி மறக்கும் வரை !

மனைவியின் பாசம்
குழந்தை பிறக்கும்வரை !

குழந்தையின் பாசம்
அது வளரும்வரை !

தாயின் பாசம்
உன் தலை சாயும் வரை !

Saturday, February 26, 2011

தனிமையில் ஏங்கும் மனம் !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு
மீண்டும் மீண்டும் அதே ஏமாற்றம் !
ஆசைகள் பல அறிவுரைகள் பல
ஆனாலும் குறையவில்லை ஏக்கம் !
கடந்து வந்த தூரம் தெரியவில்லை
சென்று சேரும் நேரம் தெரியவில்லை !
சிரித்திருந்த காலங்கள் போயின
சிந்தனையில்  காலங்கள் கழிந்தன !
பசியும் இல்லை தூக்கமும் இல்லை
கவலையும் கண்ணீரும் இங்கே !
கண்ணெதிரே யார் யாரோ
கனவினிலே யார் யாரோ !
ஊட்டி வளர்த்த தாய் எங்கே
தூக்கி வளர்த்த தந்தை எங்கே !
யாருக்காக வந்தேன் இங்கே
யாரை எண்ணி நின்றேன் இங்கே !
அண்ணன் தம்பி அருகில் இல்லை
ஆறுதல் கூறும் ஆளும் இல்லை !
அருள் தர இங்கு தெய்வமில்லை
அணைத்துக்கொள்ள அன்புமில்லை !
வாழ்த்த வந்தவர் தூற்றிபோக
வாழ வந்தவன் ஓடி போனான் !
தனிமையில் ஏங்கும் மனம்
தவிக்கிறது இங்கே தினம் !

Friday, February 25, 2011

முடிவில்லாதது !!!!!!!!!!!!!!

எனக்கு தெரியும் நீ என் நண்பன் !
உன் நினைவுகள் என் மனதில் 
உலாவருவது போலவே  என்
நினைவுகளும் உன் மனதில்
எப்போதாவது வலம் வருமா ?
இந்த நீண்ட வழிபாதையில்
உன்னுடன் கை கோர்த்து
நான் நடக்கையில் நம்
இருவரின்  எண்ணங்களும்
ஒன்றாக வேண்டும் !
உனக்கென நானும்
எனக்கென நீயும் வாழும்
இந்த வாழ்க்கை ஒரு
 நாளும் அதன் போக்கில்
மாறி பயணிக்ககூடாது !
தனி தனியே சென்றால்
எதோ ஒன்றை மட்டுமே
அடைய முடியும் ஆனால்
நம் இருவரின் முயற்சியால்
இந்த உலகத்தையும் ஆள்வோம் !
என் தவறுகளை சுட்டி காட்டும்
உரிமை உனக்கு மட்டுமே உண்டு
என் பாதையை அடைய நீ
மட்டுமே வழி காட்டுவாய் !
இந்த நட்பை கூற வார்த்தை
இல்லை , ஆனால் நம்
நட்புக்கு ஈடு இணை ஏதும்
இந்த உலகில் இல்லை !
உன்னை பிரிந்து விட்டதாக
ஒருபோதும்   நினைத்ததில்லை
ஏனென்றால் நீ இருப்பது
என்னுள் நானாய் !
நம் நட்புக்கு இலக்கணமும்
இல்லை இறுதி நாளும் இல்லை
உலகம்  முடியும்வரை இங்கே
வாழும் இந்த நட்பு !

வாழும் நட்பு

குழந்தை பருவத்தில்
கட்டி புரண்ட நட்பு
பள்ளி பருவத்தில்
கூடி  ஆட நட்பு
வாலிப பருவத்தில்
ஊர் சுற்ற நட்பு
வயதானதும் பேசி
ரசிக்க நட்பு
கவலையின் போது
தோள் சாய நட்பு
ஆனந்தத்தில் சேர்ந்து
மகிழ நட்பு
பிரிந்த போதும்
நினைத்து வாழும் நட்பு

Thursday, February 24, 2011

என்ன நிலை ?

அன்பே ஆருயிரே என்று
அழைத்ததில்லை !

ஆனந்தமாய்  கட்டி
அணைத்ததில்லை !

ஆனாலும் இது காதல்
இருந்தும்  இங்கே மோதல் !

அருகருகே இருந்தும் 
அரவமில்லை அங்கே !

முத்தம் கொடுத்தாய்
உச்சி முகர்ந்தாய் !

அன்பை   கொடுத்தாய்
அதையே வேண்டினாய் !

சொந்தமும் இல்லை
சுற்றமும் இல்லை !

தேடி வந்தாய் நீ
ஓடி வந்தேன் நான் ! 

 வெப்பமும் இல்லை
வெயிலும் இல்லை !

குளிரும் இல்லை
மழையும் இல்லை !

 உருக்கினாய் என்னை 
உறைந்துபோனேன் நான்  !





மாயக்காரன் !

ஆனந்தமாய் ஓடி
வந்தேன் உன்னை காண
அருகில் இருந்தும் எங்கோ
தொலைவில் இருந்தேன்

கற்பனையில் உன் முகம்
பார்த்த நான் நேரில்
உன் முகம் பார்க்க
முடியாமல் தவித்தேன்

என் விரல் கோர்த்து முகம்
பார்த்து நீ சிரிக்கையில்
உலகமே மறந்து போனது
இடமே இருண்டு போனது

காதலும் இல்லை காமமும் இல்லை
காற்றினிலே நீ பேசினாய்
கண்முன்னே அமர்ந்தாய்
கள்வனை போல இருந்தாய்

இந்த மனவசியத்தை நீ
எங்கிருந்து கற்றாய் ?
ஐம்புலன்களையும் அரை
பொழுதில் அடக்கினாயே
உன் மந்திர சக்தியால்
கட்டுண்டு மதி
மயங்கியவர் எத்தனைபேர் ?
மாயக்காரனே பதில் கூறு

அன்பால் வலை விரிக்கும்
தந்திரத்தை எங்கிருந்து கற்றாய்
ஆறுதலாய் நீ பேசும்
பேச்சு எந்த மொழி

உன் அன்பை வேண்டி ஓடிய
நாட்கள் போயின  உன் அன்பை
காக்க ஒளிந்து கொள்ள
ஒரு இடம் தேவை இங்கே !



Wednesday, February 23, 2011

நீயே சொல்............ !!!!!!!!!!!!!!!!!

உன் வரவு எனக்கு புதியதுதான்
இருந்தாலும் என்னுள் நீ !

மலருக்குள் மணம்போல
எனக்குள் வந்தாய் நீ !

பழைய பொருள்களை போல
பெரும் பொக்கிஷமாய் நீ !

தூக்கி ஏறிய மனமில்லை
துடிக்கும் இதயமானாய் நீ !

ஒற்றையடி பாதையாய் அல்ல
காலடி தடமாய் நீ !

உடைந்த கண்ணாடியாய் அல்ல
ஒளிரும் ஓவியமாய் நீ !

புயலாய் வந்த புதியவனே
நீயே சொல் என்னுள் யார் நீ ?

பிரிவு !

 சூரியனும் மறைந்து போனான்
நீ சென்று விட்ட சோகத்தில் !

மரங்களும் வாடி போயின
உன் காற்று நின்றவுடன் !

மணம் தரும் மல்லிகையும்
வாடி போனது நீ சூடாததால் !

இப்படி எல்லாம் உன்னை
பிரிந்த சோகத்தில் இருக்க

நான் மட்டும் எப்படி ஆனந்தமாய்
இருப்பேன் உன் பிரிவில்  ?

கோபம் !

வானுக்கு கோபம் வந்தால்
மழையாய் கொட்டுகிறது !
மேகத்துக்கு  கோபம் வந்தால்
இடியாய் முழங்குகிறது !
கடலுக்கு கோபம் வந்தால்
பேரலையாய் எழுகிறது !
காற்றுக்கு கோபம் வந்தால்
புயலாய் வீசுகிறது !
வெயிலுக்கு கோபம் வந்தால்
தணலாய் தகிக்கிறது !
நிலவுக்கு கோபம் வந்தால்
ஒரு நாள் ஒளிந்துகொள்கிறது !
உனக்கு கோபம் வந்தால்
உன் மௌனம் கொல்கிறது !
என்னை கொல் இல்லையேல்
உன் மௌனத்தை கொல் !

Tuesday, February 22, 2011

மழை !

சோவென்று மழை
அங்கே குடை பிடித்து
அசைந்து செல்லும் பலர் !

தன் முந்தானையை 
குழந்தையின் தலையில் போட்டு
ஓடுகிறாள் ஏழை தாய் !

இன்னும் வேகமாக தன்
கீற்றுகளை செலுத்தும் மழை
இன்னும் வேகமாக தாயின் ஓட்டம் !

மழை நினைத்தது அந்த தாய்
மழையில் ஆனந்தமாய்
ஓடுகிறாள் என்று

தாயின் மனதில் குழந்தை
நனையாமல் இருக்கவேண்டும்
வேண்டுமே என்ற வேகம்

இதில் யாரை குற்றம் சொல்வது ?
ஆனந்தமாய் கொட்டும் மழையையா
இல்லை அங்கே அயர்ந்து ஓடும்
அந்த ஏழை தாயையா ?

Monday, February 21, 2011

ஒற்றை வார்த்தை !

ஊரெல்லாம் உறங்க
விழித்திருந்தேன் வீணிலே !
வேலையும் இல்லை
வேண்டுதலும் இல்லை !
உறங்கு என்ற உன்
ஒற்றை வார்த்தைக்காக
விழித்திருந்தேன் விடியும் வரை !
விடிந்ததும் வினவினாயா?
இல்லை விளக்கம் தான் தந்தாய்!
உன் பார்வைக்கு எட்டும்
தூரத்தில் நான் இல்லை
உன் மனதிற்குமா இது தூரம் ?
நேரில் பார்க்கையில் என்
பார்வையை உன் பார்வையால்
தடை செய்கிறாய்  !
நீ திரும்பி நடக்கையில்
என் பார்வை உன்னை
பின் தொடர்வதை
எப்படி தடுப்பாய் ?
உன் நிழலிலும் என் நிழல்
ஒளிந்திருக்கும்
விரட்ட நினைக்காதே வீணே !
காலம் ஒரு நாள் கேள்வி கேட்கும்
அது வரை காத்திரு !
கனவில் மட்டும் என்னுடன்
கை கோர்த்திரு !

Friday, February 18, 2011

நீயும் நானும்......

 உன்னை நினைத்து நான்
வாழும் தருணங்கள்
உன் நினைவில் கரையும்
ஒவ்வொரு பொழுதுகள்
உன்னிடம் நேரில் பேசியதை
விட தனிமையில் உன்னுடன்
நான் பேசியதே அதிகம்
நீ என்னிடம் விட்டு சென்றது
உன் நினைவுகளை
மட்டுமல்ல , உன் அன்பு வேண்டி
இந்த உலகில் பல பேர் இருக்கலாம்
சிலருக்கு கிடைக்கலாம்
ஆனால் அதை முழுதும்
அனுபவிக்க வேண்டும் என்று
தன்னலம் கொண்டவள் நானாக
மட்டுமே இருக்க முடியும்
உன் பாசத்தில் கரைந்து
உன் பரிவில் உருகி இன்று
நான் நானாக இல்லை
உன்னுடம் அமர்ந்திருந்த அந்த
ஆனந்த தருணங்களை
ஒவ்வொரு முறையும்
எண்ணி பார்க்கிறேன்
என்றாவது ஒரு நாள் நீயும்
நானும் அங்கே அதே
சந்தோஷ நிமிடங்களை மீண்டும்
பெறுவோம் என்று நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் தனிமையில் .................

Thursday, February 17, 2011

வரம் வேண்டும் !!!!!!!!!!!!

உன் இமையில் ஒரு ஓரம்
அமர வரம் வேண்டும்
உன் இதய துடிப்பில் 
ஒரு முறை நான்
துடிக்க வரம் வேண்டும்
விழி மூடி நீ இருக்கையில்
அதன் உள்ளே ஒளிந்துகொள்ள
ஒரு வரம் வேண்டும்
உன் தலை முடியின் நிறமாய் நான்
மாற ஒரு வரம் வேண்டும்
ஒவ்வொரு முறை நீ
சுவாசிக்கும் போதும்
உன் இதயத்திற்குள்
சென்று வர வரம் வேண்டும்
உன் விரல்களில் என் முகம்
பதிக்க ஒரு வரம் வேண்டும்
ஒரு முறையேனும் உன்னை
துயில வைக்கும் வரம் வேண்டும்
வெளியில் நீ நடக்கும் போது
உன் நிழலில் நான் வாழ
ஒரு வரம் வேண்டும்
நீ புன்னகை செய்யும்போது
உன் இதழில் முத்தமிட
ஒரு வரம் வேண்டும்
உன் வார்த்தையின் மொழியாய்
நான் மாற ஒரு வரம் வேண்டும்
உன் தோள் மீது ஒரே ஒரு
முறை துஞ்ச வரம் வேண்டும்

நான் !

இனி நாம் சந்திக்க வேண்டாம் என்று
கூறிவிட்டு , எப்போது சந்திப்போம்
என்று ஏங்குவேன் நான் !

இனி உன்னிடம் பேசமாட்டேன் என்று
கூறிவிட்டு மீண்டும் பேசமாட்டோமா
என்று ஏங்குவேன் நான் !

இனி உன்னை தேட மாட்டேன் என்று
கூறிவிட்டு தெருவில் நடப்பவர்களில்
உன் முகம் தெரிகிறதா என்று
தேடுவேன் நான் !

 நான் நான் இல்லை
 நீயாக   நான் !

இதயம் வேண்டும்

எனக்காக ஒரு இதயம் வேண்டும் !
என் உறக்கத்திலும் என்னை
புரிந்து கொள்ள இதயம் வேண்டும் !
என் வார்த்தைகளை மட்டும் இல்லாமால்
என் மௌனங்களையும் புரிந்து
கொள்ளும் இதயம் வேண்டும் !
 என் விழி நீரை துடைக்க
கரம் கொடுக்க வரவில்லை
என்றாலும் , அந்த துயரம்
உணரும் இதயம் வேண்டும் !
நான் நினைக்கும் நேரத்தில்
என்னை நினைக்கும்
இதயம் வேண்டும் !
என்னை காதலிக்க வில்லை
என்றாலும் என் இதயத்தை
காதலிக்கும் இதயம் வேண்டும் !

Tuesday, February 8, 2011

ஓட்டம்.................

புயல் மழை ஓடி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்கள்
நான் மட்டும் இங்கே
மழையில் நனைந்து
புயலில் கை விரித்து
இங்கும் அங்கும் ஓடுகிறேன் .....
காரணம் பயம் இல்லை
ஆசையும் இல்லை
புயல் காற்றில் உன் சுவாசக்காற்று
கலந்திருப்பதால் கிடைத்தவரை
சுவாசித்து கொள்ளவே ஓடுகிறேன்
ஊராருக்கு எப்படி புரியும் இது ?
இறப்பதற்கு பயமில்லை
உன் மூச்சு காற்று
என்னுள் இருக்கும் வரை
எனக்கு இறப்பு இல்லை
இன்னும் ஓடுவேன்
பூலோக எல்லை வரை ......
என் காலில் வலிமை
இல்லை என்றாலும்
என் காதலுக்கு வலிமை உண்டு .....

கண்ணீர் .............

ஊரே உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறது,
ஆனால்.........
என் கண்களில் மட்டும் கண்ணீர் ...
ஆனந்த கண்ணீர் .......

Monday, February 7, 2011

இன்று நான் மட்டும் ....

பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்
திடீரென்று ஏதோ ஒரு உணர்வு
அது என்ன சந்தோஷமா
இல்லை ஏதோ  ஒரு உணர்வு
அட ! இந்த இடம் ம்...
இப்போது நினைவுக்கு வருகிறது
இதே இடத்தில் பல
நாள் நாம் இருவரும்......
அந்த நாளின் நினைவுகள்
இன்றும் என் மனதில் அழியாமல்
நீ மறந்திருப்பாயா இதை ?
நிச்சயம் இருக்காது
அந்த நாட்களை மறக்கவே முடியாதே
வெயில் மழை என்று
எதையும் அறியாமல் கை கோர்த்து
நடந்த நாட்களாயிற்றே
என் தோளோடு நீ சாய்ந்து
நடக்கையில் ஊரார் கண்படுமே
என்று அஞ்சியும் வெட்கியும்
ஓடிய நாட்கள் அல்லவா அது ...
இன்று நான், நான் மட்டும்
உன் நினைவுகளுடன் இங்கே ....

உன் வாழ்த்து

எதையெதையோ எண்ணி
குழம்பி கொண்டிருந்தேன் ,
தெருவில் நடப்பவர்கள் எல்லோரும்
என்னை பார்த்து விட்டு செல்லுவது
போன்று உணர்ந்தேன் ,
ஒன்றும் விளங்கவில்லை எங்கோ
நீ என்னை நினைத்துகொண்டு
இல்லை இல்லை என்னுடன் நீ
பேசிக்கொண்டு இருக்கிறாய்
ஆம் என்னால் உணர முடிகிறது
என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய்
அமைதியாக இமைகளை மூடினேன்
என்னுள் நீ வந்தாய் பேசினாய்
என்னை வாழ்த்தினாய்
 ! இன்று என் பிறந்தநாள்

கொடுத்துவிடு

கடிந்துகொள்ளும் போது கூட
கருணை கொண்ட பார்வையா
கோபத்தையும் சிரிப்பில் வெளிப்படுத்த  
உன்னால் மட்டுமே இயலும்
கொடுக்க நினைத்தும்
தவிக்கிறாய்
மறுக்க முடியாமல் ஓடி 
ஒளிகிறாய்  
ஏன் இந்த போராட்டம் ?
கொடுத்துவிடு இல்லை
மறுத்துவிடு

Saturday, February 5, 2011

குற்றவாளி யார் ?

அமைதியாய் அமர்ந்திருந்தான் கண்ணன் காவல் நிலையத்தில் , அவன் கண்கள் எதையோ தேடுவது போல் இருந்தது , ஆனால் சிந்தனையோடு இருந்தான் , காவல் காரர் பேசுவதை காதில் வாங்கியவனாய் தோன்றவில்லை.

 அருகில் இருந்தவரிடம் கேட்டேன் மெல்ல இவனை தெரியுமா என்று தெரியாதுங்க ஆனா அவன் மதுபானத்தில்  விஷத்தை கலந்து நண்பனுக்கு கொடுத்து விட்டானாம் என்றார் , என்ன .....? கண்ணனா இப்படி? நண்பனுக்கா ? எந்த நண்பன் ? இது எதுவும் தெரியாமல் விழித்துகொண்டிருந்தேன் காவல் நிலைய வாசலில்.

சிறிது நேரத்தில் ஒரு நண்பன் வந்தான்  அப்பாடா இப்போது  புரிந்து விடும் என்று நிம்மதியுடன் நின்றிருந்தேன் , அருகில் வந்தவனிடம் என்னடா கண்ணன் என்ன செய்தான்?  ஏன் அவன் இங்கே ? எப்படி?  எங்கேனும் தவறு நடந்து விட்டதா?  என்று கேள்வி மேல் கேள்வி கேட்டேன் காரணம் இருக்கிறது .

கண்ணன் மிகவும் சாதுவானவன் ,மிக நெருங்கிய நண்பர்களிடம்  மட்டுமே பேசுவான் யாரிடமும் அதிர்ந்து கூட பேச தெரியாதவன்  அவனா இன்று காவல் நிலையத்தில்? அதுவும்  கொலையாளியாய் ... இல்லை இருக்காது இதில் எதோ தவறு நடந்திருக்கிறது , இதை எப்படி தெரிந்துகொள்வது . இவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது ஆனால் பகையாளி  என்று யாருமே  இல்லை , அப்படியே  விரோதம்  இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டானே.

 இது எப்படி நடந்திருக்கும் , சரி பொறுத்திருப்போம் , சிறிது நேரத்தில் அங்கே  கொலையான  நண்பனின்  உறவினர்கள்  வந்து சேர்ந்தார்கள் கண்ணனை தங்களிடம் ஒப்படைக்கும்படியும்  அவனை அவர்களே கொல்ல போவதாகவும் பேசிக்கொண்டார்கள் .



அட  இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று நினைக்க தோன்றியது என்ன நடந்தது என்று தெரியாமலே இப்படி பழிக்கு பழி கொலைக்கு கொலை என்று இருந்தால் என்ன ஆவது ? இப்படி குற்றவாளிகளை நாமே தண்டித்ததால் பிறகு காவல் நிலையம் எதற்கு ? நீதி எதற்கு ?

அருகில் இருந்த என் நண்பனிடம் கேட்டேன், என்னுடன் வா என்று அங்கே இருந்த ஒரு மரத்தடிக்கு என்னை அழைத்து சென்றான் . அவன் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது , இப்படியும் நடக்குமா ? எனக்கு மயக்கமே வந்து விட்டது அந்த மரத்தடியிலேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டேன் , நேரம் போனதே தெரிய வில்லை , பாவம் கண்ணன் அவன் என்ன  செய்வான் எய்தவன் யாரோ இங்கே குற்றவாளியாய் இவன் , இதுதான் உலகம் என்று நொந்துகொண்டேன்.

 ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை , எப்படி முடியும் இது என்ன சாதாரண விஷயமா ? இப்படி எல்லாம் கூட யோசிப்பார்களா ? அதுவும் மனதில் விரோதம் வைத்து கொண்டு உறவாடி கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ .... நண்பன் மதி என்னிடம் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது , இங்க பாருடா இத யார் கிட்டயும் சொல்லாத உன்னை நம்பித்தான் சொல்றேன் , மூச்சி விட்டேனா உன்னையும் கொன்னுடுவோம் என்று அவன் அமைதியாய் எச்சரித்தது .....

ஐயோ எனக்கேன் வம்பு சொல்லுடா நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.
பிறகு மதி சொல்ல ஆரம்பித்தான் நான் , கண்ணன் , அறிவு என்று இன்னும் நான்கு ஐந்து நண்பர்களின் பெயர்களையும் அடுக்கிகொண்டே சென்றான் அடுத்து அவன் சொன்னது ..... முதலில் எப்போது சந்திக்கும் இடத்துக்கு கண்ணனையும் வேறு இரு நண்பர்களையும் அனுப்பி விட்டார்களாம் , பிறகு அருகில் இருந்த மதுபான கடையில் மது பாட்டில் வாங்கிகொண்டு மதியும் மற்றுமொரு நண்பனும் அருகில் இருந்த ஒதுக்கு புறமான ஒரு இடத்திற்கு வந்தார்களாம் பிறகு மருத்துவர் பயன்படுத்தும் ஒரு ஊசியில் அவர்கள் வைத்திருந்த விஷத்தை ஏற்றி பின் அதனை அந்த மது பாட்டிலின் மூடியின் வழியே உள்ளே செலுத்தினார்கலாம்.

 பின்பு அங்கிருந்து நண்பர்கள் இருந்த இடத்திற்கு சென்று கண்ணா இந்த இந்த மதுவை திற என்று அவனிடம் கொடுக்க அவன் அதை வாங்கி எப்போதும் திறப்பது போலவே திறந்தான் , கொலை செய்ய தயாராக அழைத்து வந்த அந்த நண்பனுக்கு முதலில் அந்த மதுவை ஊற்றி கொடுத்து விட்டார்கள் பின்பு மற்றுமொரு பாட்டில் திறந்து அதில் இருந்த மதுவை மற்ற நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்களாம் , இதில் சந்தேக படும்படி எந்த நிகழ்வும் இல்லை , ஆனாலும் கண்ணன் கொலையாளி ,

அட கடவுளே இது என்ன நியாயம் ? இதுதான் உலகமா? உடன் இருக்கும் நண்பனுக்கு தீங்கு நினைக்கும் இவர்கள் எல்லாம் நண்பர்களா, இல்லை மனிதர்களே இல்லை , இவர்களுடனான உறவை இன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து கனத்த மனதுடன் மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்றேன் . கண்ணனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு வழி காட்டு  



நனைத்துவிட வா

உனக்காக காத்திருந்த நாட்களைவிட
உன்னை எண்ணி ஏங்கிய
நாட்களே அதிகம் ...........
ஏக்கத்தில் நான் எங்கோ நீ
கண்ணில் கனவுடன்
காணும் பொருளெல்லாம்
கருமையாய் கூடும்
மழை மேகத்தில் உன் உருவம்
காற்றில் கரைந்துவிட 
கண்ணீரில் என் உள்ளம்
மழை வந்தால் மயிலாய் ஓடுவேன்
விரித்தாட தோகை இல்லையே
கண்ணீரை மறைக்கும் மழையும்
கட்டியணைத்தால் காணாமல் போகும்
மழையோடு வா மறைந்து போக
அல்ல நனைத்துவிட
காத்திருப்பேன் கண்ணீரோடு
கலந்து வா மேகத்தோடு
உருவமாய் இல்லையேனும்
உன்னை அறிவேன் நான் ...

மீண்டும் வேண்டும்

எனக்கே தெரியாமல் எங்கேயோ இருந்து
எப்போதும் என்னை பார்த்துக்கொண்டிருக்கும் நீ
எங்கேயோ அமர்ந்து உன்னை நினைத்து
கொண்டிருக்கும் நான் ஆனந்தமாய்...
கவலை இல்லை கண்ணீர் இல்லை
என்றோ ஒரு நாள் நீ சொன்னது
இன்றும் என் நினைவில்......
கேட்காமல் தந்தாய் அன்று
யோசித்து நின்றாய் இன்று
கடவுளும் நீ   கனவிலும் நீ ......
காற்றிலே ஓடி கன்னம் வருடினாலும்
சில்லென்ற உன் வருடல் உன்னை
உணரவைக்குமே......
உன் இனிப்பு புன்னகைக்கு ஈடேது இங்கே ?
உன் வருடலில் கிறங்கி போன
நாட்கள் தான் எத்தனை ......
கண்ணீரை துடைக்கும்  உன் விரல்களில்தான்
எத்தனை மென்மை, பெண்ணாய் இருந்தால்
பிறர் விட மாட்டார் 
ஆணாய் இருந்தும்  அடக்கம் ஏன் ?
உனக்காக ஏங்கும் உள்ளம் இங்கே
ஒருநாளேனும் உருவமாய் வா
ஏங்கி கிடக்கும் நினைப்பு 
வேண்டும் அதே அணைப்பு ......

இங்கேயும் கடவுள்

ஆங்காங்கே பறவைகள் கூட்டம் 
கண்ணுக்கு  அழகாய் எங்கெங்கும் பூக்கள் 
களைப்பாற தோன்றும் புல்வெளி
ஓரமாய் ஓடும்  சாக்கடை  நீர்
அமைதியாய் அம்மாவின் முகம்
கண்ணீரோடு தந்தை வற்றிப்போன வயிறு
பசியோடு குழந்தை, நீரில்லா  பானை
கூரையில் கடவுளின் படம் ......

Wednesday, February 2, 2011

சமூக சேவை ..........

மேடம்
என்ற குரல் கேட்டு திரும்பியவள் கண்களை குறுக்கி  நெற்றியை உயர்த்தி பார்த்தாள்  எதிரில் இருந்த அந்த இளைஞனை , அவன் சிறிதாக புன்னகைதான் , நன்றாகத்தான் இருந்தது,

என்னய்யா அழைத்தீர்கள் ? என்று கேட்டாள் தங்கம் ,
ஆமாம்  உங்களைத்தான் என்றான் அவன் ,ஒ அப்படியா நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ?  என்றாள்,

நான் உங்கள் நண்பர் ரவியின் நண்பன் ஏன் பெயர்
முரளி என்றான் , பெயரும் நன்றாக தான் இருந்தது, எதற்கு என்னை அழைத்தீர்கள் என்று வினவினாள், ரவி சொன்னார் மேடம் , உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார் என்றான் , அப்படியா ஆனால் ரவி என்னிடம் உங்களை பற்றி ஏதும் சொன்னதில்லையே என்றாள் ,

அது எனக்கு தெரியாது மேடம் , இங்கே பாருங்க இப்போ தான் ஐந்து நிமிடம் முன்னாடி பேசினோம்,  அப்போது கூட உங்களை பற்றி பேசினோம் என்றான் தன் கையில் இருந்த அந்த அழகிய அலை பேசியை காட்டி.

இருக்கட்டும் ஆனால் என்னிடம் ஏதும் கூற வில்லை ,
சரி பரவாயில்லை என்னிடம் தங்களுக்கு என்ன ஆக வேண்டும் ? என்றாள் , அதுவா மேடம் ஒன்றும் இல்லை மேடம் சும்மாதான் உங்களை பார்க்க வேண்டும் என்று தான்..... என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனான் , அட என்ன இவன் ஒன்றும் வேண்டாம் சும்மா எதற்கு பார்க்க வேண்டும் ?

பேசிக்கொண்டிருந்தவனை இடையில் தடுத்து எதாவது பண உதவி வேண்டுமா ? இல்லை நன்கொடை ஏதாவது வேண்டுமா என்றாள் , இல்லை மேடம் ம்...  உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் , அதனால் உங்களிடம் பேச வேண்டும் என்றுதான் வந்தேன் , என்னுடன் பேசுவீர்களா ? எனக்கு உங்களுடைய நட்பு வேண்டும் , தவறாக நினைக்க வேண்டாம் மேடம் என்றான் , அட இவன் என்ன இப்படி பேசுகிறான் , விட்டால் காலில் விழுந்துவிடுவான்  போல் இருக்கிறதே , சரி போகட்டும் என்னதான் பேசவேண்டும் இவனுக்கு என்னிடம் பார்க்கலாம் , என்று மனதுக்குள் நினது கொண்டு சரி பரவாயில்லை நட்பு வேண்டும் அவ்வளவு தானே இதில் என்ன தவறு ? நீங்கள் என் நண்பரின் நண்பர் என்றால் எனக்கும் நண்பரே , பரவாயில்லை நீங்கள் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்று கூறினாள்  தங்கம் , சில தினங்களில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகி போனார்கள் , தங்கம் பேசுவதை முரளி மிகவும் ரசிப்பான், முரளி பேசுவதை தங்கமும் ரசிப்பாள்,  சில நேரங்களில் ரவ்யும் உடன் இருப்பான் , மூவரும் சேர்ந்தால் அவ்வளவுதான் ,

இப்படியாக இவர்களின் நட்பு தொடர்ந்தது, ஒரு நாள் வேறு ஒருவன் வந்தான், மற்றுமொரு நாள் வேறொரு நண்பர் இப்படியாக இவர்களின் நட்பு வட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது , சும்மா அமர்ந்து அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல் சில சமூக  சேவைகளையும்  இவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள் , இதன் மூலம் இவர்களின் நட்பு பற்றி  நிறைய பேருக்கு தெரிய வந்தது ,மேலும்  இவர்களின் நற் செயல்களை பார்த்த சிலர் இவர்களுக்கு பண உதவிகளையும்  செய்ய முன் வந்தார்கள் .

இவர்களுன் உற்சாகம் இன்னும் அதிகமானது , இதனால் இலவச  மருத்துவ ஊர்தி , ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி ,தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுதல் , இப்படி இவர்களின்       தகுதிக்கேற்ப  சேவைகளை  செய்து வந்தார்கள். நட்பு என்ற பெயரில் பல அக்கிரமங்கள் நடக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு நண்பர்கள் கூட்டமா ? நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது

இவர்களின் நட்பு வட்டம் இன்னும் பெருக வேண்டும் , இவர்களின் சேவை இன்னும் தொடரவேண்டும் என்று பலர் பேசிகொள்கிரார்கள், இப்போது இவர்களின் சேவையை நாடி வருபவர் பலர், தொடரட்டும் இவர்களின் சேவை ... நட்புக்கு தோள் கொடுப்போம் , வெட்டி கதை பேசும் நண்பர் கூட்டத்திற்கு இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் ... வாழ்க நண்பர் கூட்டம்



Tuesday, February 1, 2011

இதுதான் உன் நட்பா ?

நான் துவண்டு போனபோது தூக்கி நிறுத்தினாய் ,
வாடி நின்ற போதெல்லாம் ஆறுதல் கூறினாய் ,
அழுதபோதெல்லாம் அன்பால் அரவணைத்தாய் ,
தேடியபோதேல்லாம் ஓடி வந்தாய் ,
இன்று ஒன்றுமே இல்லை உன்னைத்தவிர ...
நீ ஓட நினைக்கிறாய் ..... இதுதான் உன் நட்பா ?